சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, டிஜிபி சங்கர்ஜிவால் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கோவை சரக டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வந்த விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அவருக்கு கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் விஜயகுமாரின் சொந்த ஊரான தேனி அணைக்கரைப்பட்டியில் உள்ள ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று, அங்கு விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அவரைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோருடன் ஏராளமான பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அணைக்கரைப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடலுக்கு இன்று மாலை இறுதி மரியாதை செய்யப்பட்டு, தேனி நகராட்சி மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
இதற்கிடையே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் திரண்டு வருவதால் ரத்தினம் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!
’டியர் அம்பேத்கர்னு தான் கூப்பிடுவார்’: டிஐஜி மறைவால் உருகிய இன்ஸ்பெக்டர்