கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழந்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூன் 19) தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் கள்ளச்சாராயம் குடித்த 74 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உடல்நலன் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ” பாக்கெட் சாராயம் குடித்த 74 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.
அவசர சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 17 பேரும், சேலம் 11, விழுப்புரம் 4 பேர் அனுப்பப்பட்டனர். இதில் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவரும், சேலம் 3, புதுச்சேரி 3, கள்ளக்குறிச்சி 6 பேர் என 13 பேர் இறந்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. உயிரிழந்தவர்கள் அருந்திய பாக்கெட் சாராயத்தை ஆய்வு செய்ததில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
பாக்கெட் சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக முதல்வருக்கு தெரியவந்ததையடுத்து காவல் கண்காணிப்பாளர் உள்பட காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் இங்கே வருகிற போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரிடம் பேசி உதவி செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த பேட்டி முடிந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொள்ள போகிறோம். அவரிடத்தில் நிலைமையை தெரிவிப்போம். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிவாரணம் வழங்குவார் என்பது எனது நம்பிக்கை.
கள்ளச்சாராயம் விற்பனையை நியாயப்படுத்த முடியாது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இப்பவே கண்ணைக்கட்டுதே: அப்டேட் குமாரு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: மருத்துவமனை விரைந்த அமைச்சர்கள்!