மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் எப்போது? அமைச்சர் வேலு தகவல்!

தமிழகம்

மதுரை கீழக்கரையில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று (செப்டம்பர் 18) ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்தப் போட்டிகளில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள். இதில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானது.

jallikattu ground in madurai

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி, மதுரையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு மைதானமானது, 66 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இந்தப் பணிகளைத் தமிழக சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது.

jallikattu ground in madurai

பல்நோக்கு அரங்க வடிவில் அமைக்கப்படும் இந்த மைதானத்தில், பல வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன.

மைதானத்தைச் சுற்றி பல்நோக்கு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பான தனி அரங்கம் அமைக்கப்படும்.

இந்த பிரம்மாண்ட மைதானம் அமைய உள்ள இடத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று (செப்டம்பர் 18) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “முதற்கட்டமாக 16 ஏக்கர் நிலப்பரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

விரைந்து விளையாட்டு மைதானத்தைக் கட்டக்கூடிய ஒப்பந்ததாரர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும். 2024-க்கு முன்பாக இந்த மைதானத்தைக் கட்டி முடிக்கவேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு ஆணையிட்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

டிஜிட்டல் திண்ணை: திமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் யார்? முப்பெரும் விழா க்ளூ!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.