கர்நாடகா அரசிடம் பேசி தண்ணீரை திறந்து விட காவேரி நீர் மேலாண்மைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 5) வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டிற்கு காவேரியில் இருந்து திறந்து விடவேண்டிய நீரின் அளவு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 5) டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தார்.
அமைச்சர் துரைமுருகனுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லி சென்றார்.
மத்திய அமைச்சரிடம், தமிழக அமைச்சர் துரைமுருகன், ஜூன் மாதத்தில் கர்நாடக அரசு திறக்க வேண்டிய காவிரி நீரின் அளவு மற்றும் ஜூலை மாதத்தில் திறந்து விட வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்து ஆலோசனை நடத்தி அது தொடர்பான ஆவணங்களுடன் கோரிக்கை மனுவை அளித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “நியாயமாக ஜூலை 3 ஆம் தேதி வரையில் 12.213 டிம்சி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை 2.993 டிஎம்சி தண்ணீர் தான் கிடைத்துள்ளது. தமிழகத்திற்கு கர்நாடகா 9.220 டிஎம்சி தண்ணீரை அளிக்கவில்லை.
இந்நிலையில் இருந்தால் டெல்டா பயிர்கள் எல்லாம் காய்ந்துவிடும். ஆகையினால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி இதற்கு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டியது காவேரி நீர் மேலாண்மை வாரியம்.
கர்நாடகா அரசிடம் பேசி தண்ணீரை திறந்து விட காவேரி நீர் மேலாண்மைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன்.
மத்திய அமைச்சர் உடனே இணை செயலாளரை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்து காவேரி நீர் மேலாண்மை வாரியத்திடம் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரிடம் மேகதாது அணை குறித்து எதுவும் விவாதிக்கவில்லை” என்று பேசினார் அமைச்சர் துரைமுருகன்.
மோனிஷா
வேங்கைவயல் கொடுமை: டி.என்.ஏ பரிசோதனைக்கு 8 பேர் ஆஜர்!
மதுரை கலைஞர் நூலகம்: சிறப்பம்சங்கள் – புகைப்பட தொகுப்பு!