தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வரும் தொடர் விடுமுறை தினங்களில் எத்தனை சிறப்பு பஸ்களை இயக்குவது என்பது குறித்து அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆண்டு 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகை வருகிறது. அதற்கு முதல் நாள் 14ஆம் தேதி (இரண்டாம் சனிக்கிழமை) போகிப் பண்டிகை.
பொங்கலுக்கு அடுத்த நாள், 16ஆம் தேதி (திங்கட்கிழமை) மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், அதற்கடுத்த நாள் 17ஆம் தேதி (செவ்வாய்கிழமை) உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.
அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணத்துக்கு ரயிலில் நான்கு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர்.
வழக்கமான ரயில்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.
ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நம்பிதான் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
அந்த வகையில் அரசு பஸ்களில் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது. ஆனால், தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம் போல் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்ல 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும், பிற நகரங்களில் சென்னைக்கு வர சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்படுகிறது.
இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 3) போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் செயலாளர் கோபால் முன்னிலையில் நடக்கிறது.
இதில் அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரிவான ஏற்பாடுகளை செய்யவும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வழக்கம்போல ஆறு சிறப்புப் பேருந்து நிலையங்கள் மூலம் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
தொடர்ந்து எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்குவது என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-ராஜ்
கூவம் ஆற்றின் குறுக்கே 2 உயர்மட்ட பாலங்கள்!
கரூர் கம்பெனி மீது டிஜிபியிடம் புகார்: டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!