“அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கவில்லை. எங்கள் பிள்ளைகளை நாங்கள் தான் வளர்க்க வேண்டுமே, தவிர மற்றவர்களுக்கு தத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஜனவரி 2) தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு அருகில் உள்ள 500 அரசு பள்ளிகளை 2025-26-ஆம் கல்வி ஆண்டில் மேம்படுத்துவதற்கு தனியார் பள்ளிகள் உதவி செய்யும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்தார்.
இதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், “நம்ம ஊர் நம்ம பள்ளி என்ற முறையில் தமிழ்நாடு அரசின் சிஎஸ்ஆர் ஆக்டிவிட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் தங்களது பங்களிப்புகளை நிதியாகவோ, பொருளாகவோ அரசு பள்ளிகளுக்கு வழங்க முடியும்.
இதுவரை ரூ.504 கோடி நம்ம ஊர் நம்ம பள்ளி திட்டத்தின் மூலமாக வந்திருக்கிறது. இதில் ரூ.350 கோடி மதிப்பிலான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.
அரசு பள்ளிகளில் படித்து தான் நாங்கள் இன்றைக்கு தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறோம். எனவே, சிஎஸ்ஆர் திட்டத்தில் 500 பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்க நாங்களும் எங்களுடைய பங்களிப்பைத் தருகிறோம் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தது.
அதற்கு நான் நன்றி தெரிவித்தேன். ஆனால், அரசு பள்ளிகளை தாரவார்த்துவிட்டோம், தத்துக்கொடுத்துவிட்டோம் என்று செய்திகள் வெளியிடுகிறார்கள்.
பள்ளி கல்வித்துறை என்பது எங்கள் பிள்ளை. எங்கள் பிள்ளைகளை நாங்கள் தான் வளர்க்க வேண்டுமே, தவிர மற்றவர்களுக்கு தத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லி தேர்தல்: GOAT விஜய் ஆக மாறிய கெஜ்ரிவால்
ராணுவத்தில் சேவை: இந்தியாவின் 100வது கோடி குழந்தையின் நாட்டுப்பற்று!