ஆந்திரப் பிரதேச மக்களின் பிடித்த உணவு பெசரட்டு. பாசிப்பருப்பை பிரதானமாகக் கொண்டு செய்யப்படும் பெசரட்டில் தினை அரிசியையும் சேர்த்து சத்தான தினை பெசரட்டு செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
தினை அரிசி – அரை கப்
பச்சை பாசிப்பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – இரண்டு அல்லது மூன்று
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தினை அரிசியையும், பச்சை பாசிப்பருப்பையும் தனித்தனியாக ஓர் இரவு ஊற வைக்கவும். மறுநாள் காலை அவற்றை தண்ணீர் இறுத்து ஒன்றாகக் கலந்து அவற்றுடன் இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மையாக அரைக்கவும்.
பிறகு, பெருங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். பெசரட் திக்காக வேண்டுமென்று விரும்பினால், இட்லி மாவு பதத்துக்கு திக்காக கரைக்கவும். அடுப்பில், தவா அல்லது தோசைக் கல்லை வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டு, தோசை வார்த்து, இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்கு தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.