அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்தவை தினை. தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் இதில் நிறைந்துள்ள கால்சியம் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த தினை கிச்சடி சேர்க்கப்படும் காய்கறிகளில் நிறைந்துள்ள வைட்டமின் சத்துகள், பார்வைக்குறைபாடு, கூந்தல் மற்றும் சருமப் பாதிப்புகள் வராமல் தடுக்கும். இந்த தினை கிச்சடி இந்த வீக் எண்டை சிறப்பாக்கும்.
என்ன தேவை?
தினை – கால் கிலோ
பொட்டுக் கடலை – 15 கிராம்
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் கலவை – ஒரு கப்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 5 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு உளுத்தம்பருப்பு, பொட்டுக் கடலை, பட்டை கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, ஒரு பங்கு தினைக்கு 4 பங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் தினை சேர்த்து மூடி, மூன்று விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: சிறுதானியம் இறுகும் தன்மை உடையது. சிறிது நேரத்தில் சரியாகிவிடும். இறக்கியவுடன் பரிமாறுவதாக இருந்தால், தண்ணீர் அளவை அரை டம்ளர் குறைக்கவும்.