”ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை”: திட்டமிட்டபடி போராட்டம்!
பால் வளத்துறை அமைச்சர் நாசருடன் இன்று பால் உற்பத்தியாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 17 ) முதல் திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் இன்று அறிவித்துள்ளது.
தற்போது ஆவினுக்கு கொள்முதல் செய்யப்படும் பசும்பாலின் விலை லிட்டருக்கு 35 ரூபாயாக உள்ள நிலையில் அதிலிருந்து ஏழு ரூபாய் உயர்த்தி 42 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல எருமை பாலின் விலை தற்போது 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், ஏழு ரூபாய் உயர்த்தி 51 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆவினுக்கு எதிராக பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று பால்வளத் துறை அமைச்சர் நாசருடன், பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என்றும்,
திட்டமிட்டபடி இந்த போராட்டம் நடைபெறும் எனவும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
ஆவினுக்கு தினசரி 27 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் இந்த அளவு படிப்படியாக குறையும். அடுத்த 5 நாட்களில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”அதானி விவகாரத்தை எதிர்கொள்வதில் மோடிக்கு பயம்”: ராகுல் காந்தி விளாசல்!
நில அபகரிப்பு வழக்கில் மாஜி மந்திரி!