ஆவின் பொருட்களை ரூபாய் 48 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியிருக்கிறார்.
ஆவின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆவின் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்ரவரி 26) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு பிறகு மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பால் உற்பத்தியாளர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது வரை ரூபாய் 36 கோடியே 27 லட்சம் வரை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 10,785 கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களை குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்ற சங்கங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .அதன் ஒரு பகுதியாக 7,338 சங்கங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் 15,752 விவசாயிகளுக்கு ரூபாய் 102 கோடி கடன் வழங்கப்பட்டு புதிய கறவை மாடுகள் வாங்கப்பட்டுள்ளது.மேலும், 20% புரத சத்துமிக்க மாட்டுத் தீவனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 48 கோடி அளவிற்கு மோர், தயிர், ஐஸ்கிரீம் போன்ற பால் உப பொருட்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 39.40 கோடி அளவுக்கு பால் உபபொருட்கள் விற்பனையாகின.
ஆவின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் வரும் காலங்களில், பால் கொள்முதலானது 20% அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆவின் குடிநீர் விற்பனை தொடர்பாக விரைவில் முடிவெடுப்போம். ஆவின் பார்லர்களின் கட்டமைப்புகளை புதுமையான முறையில் நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்”, என்றார்.
-கவின், இரசிக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி முன்னிலையில் அண்ணாமலை வேண்டுகோள்!
காளிதாஸ் ஜெயராமுடன் சேர்ந்து நடிப்பதற்கு யோசிக்க வேண்டும் : அர்ஜுன் தாஸ்