மழை, வெள்ளம்..யார் யாருக்கெல்லாம் நிவாரணம்? – அரசாணை வெளியீடு!

Published On:

| By Selvam

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எந்தெந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று (டிசம்பர் 13) அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரண தொகையானது நியாய விலைக்கடைகளில் ரொக்கமாக வழங்கப்பட உள்ளது.

வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய மற்றும் மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் பாதிப்பு விபரங்களையும், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக்கடைகளில் விண்ணப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு அதனடிப்படையில் அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளிலேயே தேவையான அளவு விநியோகிக்கப்படடும்.

கீழ்க்கண்ட நான்கு மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின்படி இந்த நிவாரணம் பின்வருமாறு வழங்கப்பட உள்ளது.

(அ) சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்கள்

(ஆ) செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்

(இ) காஞ்சிபுரம் மாவட்டம்: குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்

(ஈ) திருவள்ளூர் மாவட்டம்: (1) பொன்னேரி (2) கும்மிடிப்பூண்டி, (3) ஆவடி, (4) பூவிருந்தவல்லி (5) ஊத்துக்கோட்டை (6) திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேர் கைது!

மக்களவையில் நுழைந்த இருவர் : எம்.பி.க்கள் மீது வண்ண புகை வெடி வீச்சு!