சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 12) விருது வழங்கினார்.
சர்சதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்குதல் மற்றும் முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கான, இணையதளப் பதிவு துவக்க விழா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்டம்பர் 12) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது 1130 விளையாட்டு வீரர்களுக்கு, 16.28 கோடி மதிப்பில், காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கினார் முதல்வர். 2018,19,20,21 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.
ஆடுகளம் என்ற பெயரில் விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின், “அமைச்சர் மெய்யநாதன், ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார். தனது துறையை துடிப்புடன் செயல்படுத்தி வருகிறார்.
திராவிட மாடல் குறிக்கோளின்படி, அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்.
தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தியதால் உலகமே தமிழ்நாட்டை வியந்து பார்த்தது.
செப்டம்பர் முதல் அடுத்த ஆறு மாதத்திற்கு தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என ஐந்து பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் சாதனை புரிய வேண்டும் என்பதால் இதுபோன்ற விழா நடக்கிறது” என்றார்.
செல்வம்
செங்கல்பட்டில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு நகரம்: அமைச்சர் மெய்யநாதன்