மேட்டூர் அணை: இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கு!

Published On:

| By Monisha

mettur dam water storage reducing

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.

ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.

தற்போது குறுவை சாகுபடி அறுவடை செய்யும் தருவாயில் உள்ள நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு (12ஆம் தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் உரிய தண்ணீரை தரவில்லை.

மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்த பிறகும் அதை கர்நாடக அரசு ஏற்க மறுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறி விட்டது. இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது.

கடந்த சில நாட்களாக நீர்வரத்து 800 கன அடிக்கும் குறைவாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 507 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பாசனத்துக்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 44.06 அடியாக சரிந்தது. நேற்று நீர்மட்டம் மேலும் குறைந்து 43.11 அடியானது. தற்போது அணையில் 13.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 5 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

இந்த நிலையில் நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

ராஜ்

வேலைவாய்ப்பு: மத்திய பல்கலைக்கழகத்தில் பணி!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel