மேட்டூர் அணை திறப்பு: கூடுதல் சாகுபடி செய்ய இலக்கு!

Published On:

| By Kavi

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக நீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், சென்ற ஆண்டு முதன்முறையாக மே மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கடந்த ஆண்டைவிட கூடுதலாக சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவிகிதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும், 20 சதவிகிதம் ஆழ்துளை கிணற்று தண்ணீரை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 47,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ஒரு பகுதியாக வலங்கைமானில் நடப்பாண்டில் சுமார் 10,000 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,

குறுவை சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடுதல் சாகுபடி குறித்து பேசியுள்ள அங்குள்ள விவசாயிகள், “மானிய விலையில் விதை நெல், உரம் குறுவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடும் வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவிகிதம் மானியத்தில் விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். 

குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் மிகப்பெரிய அளவில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.

இதனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

வேளாண்மைக்காக திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும். 

ஆறுகளில் இருந்து பாசனத்துக்காகப் பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்துக்குப் பயன்படும்.

இவற்றை குறைவின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்” என்று உறுதியளித்துள்ளனர்.

ராஜ்

தினகரனுடன் வைத்திலிங்கம் சந்திப்பு… அடுத்து சசிகலா- இணைத்து வைக்குமா திருமண மேடை?

முன்னுக்கு பின் முரண் : ஆளுநரை சந்தித்த ஆணைய உறுப்பினர்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் கோஸ்மல்லி!

Mettur Dam Opening Date
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share