மெட்ரோ ரயில் பணியின் போது புராதன சின்னங்கள், பழமையான கோயில்கள் ஆகியவை பாதிக்காத வகையில் பணி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. தினசரி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மேலும் சில பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டது.
2025 ஆம் ஆண்டு முதல் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த கவுதமன் உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், ”அனுமதி பெறாமல் கோயிலில் ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் 15 அடி நிலத்தைக் கையகப்படுத்தும் வகையில் எல்லை வரையப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் போது புராதன கோயில்களுக்குப் பாதிப்பு ஏற்படாது எனத் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
ஆனால் சட்ட விதிகளைப் பின்பற்றாமல் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காகத் தூண்கள் அமைத்தும் சாலையை விரிவாக்கம் செய்தும் அரசு செயல்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (ஜனவரி 4) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர், சண்முகசுந்தரம், “உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் படி கோயில்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
உயிர்களை பலி வாங்கும் மதுரவாயல் சாலை: அரசு கவனிக்குமா?
எட்டு வழிச்சாலையை எதிர்க்கவில்லை : டெல்லியில் மீண்டும் எ.வ.வேலு