கிச்சன் கீர்த்தனா: மேத்தி பனீர் புர்ஜி

Published On:

| By Minnambalam

வட இந்தியாவின் தெரு உணவுக் கடைகளில் பிரபலமானது புர்ஜி. தற்போது தென்னிந்தியாவிலும் நுழைந்துவிட்ட புர்ஜியை நீங்களும் சமைத்து ருசிக்கலாம். சப்பாத்தி மற்றும் தேங்காய்ப்பால் சாதத்துக்கு  மேட்ச் ஆகும் இந்த  மேத்தி பனீர் புர்ஜியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.  

என்ன தேவை?

வெந்தயக்கீரை (மேத்தி) – ஒரு கப்
பனீர் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
முந்திரி – 10
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
சோம்புத்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பனீரை நீளமாக இருக்கும் பெரிய கண் துருவியில் துருவிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். முந்திரியை பேஸ்ட்டாக மிக்ஸியில் அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம், தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பச்சை வாசனை போன பிறகு கீரையையும் சேர்த்து வதக்கவும். பிறகு சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கீரை வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கீரை வெந்ததும் முந்திரி பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இறுதியாக பனீர் துருவலை சேர்த்து கரண்டியால் மெதுவாக ஒரு புரட்டுப் புரட்டவும். 2 டீஸ்பூன் நெய்விட்டு கொத்தமல்லித்தழை தூவி நல்ல கிரேவி பதத்தில் இறக்கவும்.

குறிப்பு: பாலக்கீரை இதுபோல் செய்யலாம். பனீரை அதிகமாக வதக்கினால் உடைந்து கரைந்து போகும். ஏற்கெனவே நாம் அதை துருவிதான் உபயோகப்படுத்துகிறோம் என்பதால் கவனம் தேவை.

கீரை – அவல் உப்புமா

பனீர் – குடமிளகாய் புர்ஜி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share