கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்கள் அன்றாடம் அதிகரித்துக்கொண்டே போகிறது, சிபிசிஐடி கைது நடவடிக்கையும் விசாரணையும் நீண்டுகொண்டே போகிறது.
கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டது மொத்தம் 219 பேர் அதில் 11 பெண்கள் ஒரு திருநங்கை இதில் இன்று வரையில் இறந்து போனவர்கள் 5 பெண்கள் உட்பட 64 பேர்.
சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் முண்டியாம்பாக்கம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தற்போது 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மாலை வரை 88 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 2 பேர், சேலம் மருத்துவமனையில் 3 பேர், ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் மொத்தம் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களின் நிலை இப்படி இருக்க, கள்ளச்சாராயம் என்ற போர்வையில் விஷத்தன்மை உள்ள மெத்தனால் கலந்து சாராயம் என்று விற்பனை செய்தவர்களையும் கம்பெனி உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்தும், சிலரை கைது காட்டாமல் விசாரித்தும் வருகின்றனர் சிபிசிஐடி போலீஸார்.
கள்ளச்சாராய மரணம் சிபிசிஐடிக்கு மாற்றியதும் சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு, எஸ். பி . வினோத் சாந்தா ராம், டி.எஸ்.பி. ஆர். கே. சசிதர் (இவர் திருநெல்வேலி ஜெயக்குமார் மர்ம மரணத்தை விசாரித்து வருபவர்) விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி. கோமதி மற்றும் இன்ஸ்பெக்டர் போலீஸார் என களத்தில் இறங்கினார்கள். கூடுதலாக புலன்விசாரணையில் திறமையான இன்ஸ்பெக்டர் ரம்யா, வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திரா இருவரும் இணைந்துள்ளனர்.
டிஎஸ்பி ஆர். கே. சசிதர் திறமையானவர் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவர் என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் முக்கிய குற்றவாளிகளைத் தூக்கி வருகிறார்.
கடலூர் எஸ்பி ராஜாராம் முயற்சியால் முக்கிய குற்றவாளியான மடுக்கரை மாதேஷை பிடித்து சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து ஏற்கனவே மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார் மாதேஷ் பயன்படுத்திய செல்போனின் அழைப்பு விவரங்களை ஆராய்ந்தனர்.
அதன் அடிப்படையில் ராஜாபாளையம் சிப்ஸ் கடை உரிமையாளர் சக்திவேல், மாதவரம் விஷ்ணு கெமிக்கல் கம்பெனி ஓட்டுனர் சிவக்குமார் இருவரையும் தூக்கி வந்தனர். அதன் பின் விஷ்ணு கெமிக்கல் கம்பெனி உரிமையாளரான சேட் மற்றும் அவரது மகன் இருவரையும் சிபிசிஐடி போலீஸார் தூக்கி வந்து விசாரித்து வருகின்றனர்.
சிபிசிஐடி போலீஸாரிடம் என்ன வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என்று பார்ப்போம்!
விஷ்ணு கெமிக்கல் கம்பெனியின் உரிமையாளரான சேட் விசாரணையின்போது,
‘எனக்கு ஒன்னுமே தெரியாது. அந்த மாதேஷ் எனக்கு யாருன்னே தெரியாது. அறிமுகமும் இல்லை, பழக்கமும் இல்லை. ஆன் லைனில் எனது கம்பெனி விலாசத்தைக் கண்டுபிடித்து, ஜிஎஸ்டி நெம்பர் கொடுத்து மெத்தனால் கேட்டார். நானும் பிசினஸ் தானே என்று கொடுத்துட்டேன் சார்” என்று சொல்லியிருக்கிறார்.
”ஒரு லிட்டர் என்ன விலைக்கு கொடுத்தீர்கள்?” என்று போலீஸார் கேட்க..,
“ஒரு லிட்டர் 30 ரூபாய் என்று 100 லிட்டர் கொடுத்தேன்… முதல்முறையாக கொடுத்தேன்” என்றார் சேட்டு.
குறுக்கிட்ட விசாரணை அதிகாரி, “உங்க கம்பெனியிலிருந்து பில் இல்லாமலும் இன்லீகலாகவும் கொடுத்து இருக்கீங்க. இன்னொரு பக்கம் உங்கள் ஓட்டுநர் சிவக்குமார் திருட்டுத்தனமாகவும் பலமுறை கொடுத்துள்ளார்” என்று சொல்ல… “சார்… சிவக்குமார் பண்ண திருட்டுத்தனம் இப்பதான் எனக்கு தெரியுது” என்று போலீஸிடம் சொல்லியிருக்கிறார் சேட்.
அடுத்து, ராஜாபாளையம் (ராஜபாளையம் அல்ல… இது ராஜா பாளையம். பண்ருட்டி அருகே உள்ளது) சிப்ஸ் கடை சக்திவேல் போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில்,
“மாதேஷ் ராஜாபாளையத்தில் உள்ள எனது கடைக்கு டீ சாப்பிட வரும்போது பழக்கம் ஏற்பட்டது. இடம் வாங்க வேண்டும் என்று சொல்வான். இரண்டு மூன்று இடத்தில் இடம் மற்றும் நிலம் வாங்கி கொடுத்துள்ளேன். அதற்கு கமிஷன் கொடுப்பான்.
ஒரு நாள் உங்கள் ஜிஎஸ்டி நம்பரில் ஆயில் வாங்க வேண்டும் என கேட்டான். சரி என நம்பர் கொடுத்தேன். ஆனால் இப்படி விஷத்தை வாங்குவான்னு எனக்கு தெரியாது சார்” என்று சக்திவேல் சொல்ல…
“சரி உனக்கு ஒன்னுமே தெரியாதுன்னா… உன்னோட இடத்தில் அந்த ஆயில் வைக்க எப்படி அனுமதி கொடுத்தே?” என்று கேட்டிருக்கிறார்கள் போலீஸார்.
“ பட்டப் பகலில் மக்கள் கூட்டம் இருக்கும் போதே சென்னையிலேர்ந்து வரும் வண்டியை கடைக்கு முன்னாடி நிறுத்திட்டு இறக்குவான். அதனால நானும் சந்தேகப் படவில்லை. கடைசியில ஒரு வாரம் முன்புதான் சந்தேகப் பட்டேன் இவன் ஏதோ தவறான தொழில் செய்கிறான் என்று.
சார் நான் அப்ரூவராக மாறி அரசு சாட்சியாக வருகிறேன் என்னை விட்டு விடுங்கள் சார்” என கதறி அழுதுள்ளார் சக்திவேல்.
கைதும் விசாரணையும் நீண்டுகொண்டே போகிறது!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
பரிசீலனையில் பழைய ஓய்வூதிய திட்டம் : அமைச்சர் தங்க தென்னரசு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… இறுதி வேட்பாளர்கள் பட்டியல்!