தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. தினமும் பல இடங்களிலும் வெயில் சதமடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 8) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த ஆறு நாட்களுக்கு, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (மே 9) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல இன்று முதல் மே 12 வரை அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°−3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40°-41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°-39° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°−37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்
அரண்மனை சீரிஸை அடுத்து கலகலப்பு சீரிஸுக்கு தாவும் சுந்தர்.சி