கிறிஸ்துமஸ் தினத்தன்று மழை பெய்யுமா? – வானிலை மையம் தகவல்!

Published On:

| By Selvam

வரும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நேற்று (டிசம்பர் 22) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.


இது மேலும், மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (டிசம்பர் 24), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு
அருகில் நிலவக்கூடும்.

இதன்காரணமாக, 23-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

24-12-2024: வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

25-12-2024: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

23-12-2024 முதல் 25-12-2024 வரை: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-12-2024 மற்றும் 27-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.


வங்கக்கடல் பகுதிகள்:

23-12-2024: ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24-12-2024 மற்றும் 25-12-2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-12-2024 மற்றும் 27-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

200 டன் தங்கம் வைத்திருந்தாலும் தங்க விரும்பவில்லை – சிரிய அதிபர் மனைவி விவாகரத்து?

2026.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 25 இடங்கள் வேண்டும் : வன்னி அரசு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share