சென்னை கார் ஓட்டுநரின் வங்கி கணக்கிற்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு 30 நிமிடத்தில் திரும்ப பெறப்பட்டுள்ளது.
பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி வசித்து வருகிறார்.
கார் ஓட்டுநரான இவரது வங்கி கணக்கிற்கு கடந்த 9 ஆம் தேதி 9 ஆயிரம் கோடி ரூபாய் டெப்பாசிட் ஆகியிருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியைப் பார்த்த ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியம் இருக்கிறது என்று எண்ணுவதற்கே சிரமப்பட்டுள்ளார். மேலும் தனது வங்கிக் கணக்கில் ரூ.105 மட்டுமே இருந்த நிலையில் ரூ. 9 ஆயிரம் கோடி டெப்பாசிட் குறுஞ்செய்தி ஒரு ஏமாற்று வேலை என்று கருதியிருக்கிறார்.
ஆனால் அவர் அந்த குறுந்தகவலை ஆய்வு செய்தபோது அது தான் கணக்கு வைத்திருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து வந்ததை உறுதி செய்தார்.
பின்னர் ராஜ்குமார் இருக்கும் பணத்தை நண்பருக்குப் பகிர்ந்து பார்த்தால் உண்மை தெரிய வரும் என்று தனது நண்பருக்கு ரூ.21 ஆயிரத்தைப் பகிர்ந்துள்ளார்.
அப்போதுதான் தனது வங்கிக் கணக்கிற்கு ரூ.9 ஆயிரம் கோடி வந்தது உண்மைதான் என்று உறுதி செய்தார்.
ஆனால் 30 நிமிடங்களில் அந்த பணத்தை மெர்க்கண்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. அப்போது, ராஜ்குமார் 21 ஆயிரம் பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றியிருப்பதை வங்கி அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த வங்கி கிளை அதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை தவறுதலாக உங்களது வங்கி கணக்கில் செலுத்திவிட்டோம். அதனால் மீண்டும் எடுத்துக் கொண்டோம்.
வேறு வங்கி கணக்கிற்கு நீங்கள் அனுப்பிய ரூ.21 ஆயிரத்தை செலவு செய்ய வேண்டாம். அதை வங்கியில் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்கள்.
ஆனால் இதற்கிடையில் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி வந்ததால் பயந்துபோன ராஜ்குமார் வக்கீல் ஒருவருடன் தி.நகரில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார்.
அங்கு ராஜ்குமார் தரப்பிலும், வங்கி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரும் சமாதானமாக செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
“தி.நகரில் உள்ள வங்கி கிளையில் எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. நான் எனது நண்பருக்கு அனுப்பிய ரூ.21 ஆயிரம் பணத்தை திருப்பி தர வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கூறினார்கள். மேலும் வங்கி சார்பில் எனக்கு கார் கடனும் வழங்கப்பட்டுள்ளது” என்று ராஜ்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
“அதிமுக பாஜக இடையே பிரச்சனையில்லை” – அண்ணாமலை
சின்னம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு: ஓபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!