நடிகை மீரா மிதுனை காணவில்லை என்று அவரது தாயார் ஷியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுனையும் அவரது நண்பர் அபிஷேக் என்பவரையும் கைது செய்தனர்.
பின்னர் மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தினமும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் மீரா மிதுன் காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வரவில்லை.
இதனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மீரா மிதுனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “மீரா மிதுன் தொடர்பான தகவல் எங்களுக்கு தெரியவில்லை. அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மீரா மிதுன் தாயார் ஷியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுனை காணவில்லை என்று நேற்று (அக்டோபர் 21) மாலை புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மீரா மிதுன் தாயார் அளித்த புகார் மனுவில், “கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் எங்களுடன் தொடர்பில் இல்லை. அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.
இதனால் மிகவும் கவலையாக உள்ளது. மீரா மிதுன் குறித்த தகவல் கிடைத்தால் காவல்துறையிடம் கண்டிப்பாக தெரிவிக்கிறோம். மீரா மிதுனை காவல்துறையினர் கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீரா மிதுன் தாயார் அளித்த புகார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.
செல்வம்
மாநில அரசு தொலைக்காட்சி: ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்து, ஜிம்பாப்வே