பணமோசடி வழக்கில் நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகையும் மாடலுமான மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “கடந்த 2018ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டது.
அப்போது அதற்கான அரங்கில் தனியார் நிறுவனம் ஒன்றைப் பிரபலப்படுத்துவதற்காக, மிஸ் தமிழ்நாடு, மிஸ் தென் இந்தியா பட்டங்களை வென்ற என்னிடம் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி என்பவர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், பணத்தைத் திருப்பி தரவில்லை எனவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில் என் மீது 2019ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில், நடிகை மீரா மிதுன் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.
மேலும், தற்போது தலைமறைவாகி உள்ள மீரா மிதுன் எங்கு உள்ளார் என தெரியவில்லை. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையில் ஆஜரான காவல் துறையினர், ’நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை’ என கடந்த நவம்பர் 15ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
ஆம்னி பேருந்து கட்டணம்: அரசே நிர்ணயிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
அதிமுகவில் இடமில்லை: 3 பேருக்கு மெசேஜ் சொன்ன ஜெயக்குமார்