தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே உள்ள கிராமமான மீனாட்சிபுரத்தில் வசித்துவந்த ஒரே நபர் மே 26ஆம் தேதி உயிரிழந்ததால், அந்த கிராமம் ஆளில்லா கிராமமானது.
ஆளில்லா கிராமமான மீனாட்சிபுரம்
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே உள்ள கிராமம் மீனாட்சிபுரம். நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து இந்த கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,269 பேர் வசித்து வந்தனர்.
அந்த கிராமத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக அங்கு வசித்த மக்கள் தினசரி 5 கிமீ தூரத்துக்கும் மேல் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டி இருந்தது
விவசாயம் உட்பட தொழில் எதுவும் செய்ய முடியாமல் அங்கு இருந்தவர்கள் பிழைப்பிற்காக ஊரை காலி செய்துவிட்டு வேறு ஊர்களுக்கு சென்றனர்.
இருந்தபோதும், மீனாட்சிபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்ற 70 வயதான முதியவர் மட்டும் அங்கேயே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வாழ்ந்து வந்தார்.
வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, வெளி ஊர்களில் வேலை கிடைத்து சென்றது போன்ற காரணங்களால் இந்த கிராமத்தில் இருந்த மக்கள் இங்கிருந்து சென்றதாக மீனாட்சிபுரம் அருகில் இருக்கும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், முதியவர் கந்தசாமி மட்டும் கடைசி வரை இந்த கிராமத்தில்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக வாழ்ந்துள்ளார். தொடர்ந்து, ஊரைவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும், பழையபடி ஊர் செழிக்க வேண்டும் என்றும் முதியவர் கந்தசாமி ஆசையோடு இருந்துள்ளார்.
இந்த நிலையில்,அவர் கடந்த மே 26ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கந்தசாமியின் உறவினர்கள் மட்டுமின்றி, அந்த கிராமத்தில் வாழ்ந்த பெரும்பாலானோரும் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முதியவர் கந்தசாமியின் இறுதிச் சடங்கு அருகே உள்ள சிங்கத்தாகுறிச்சி என்ற கிராமத்தில் நடத்தப்பட்டு, அவரது உடல் மீனாட்சிபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சிபுரத்தில் மீண்டும் மக்கள் குடியேறி, அந்த ஊர் பழைய நிலைக்கு வர வேண்டும் என அருகில் உள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சட்டென குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம்!
Share Market : 4ஆவது நாளாக குறைந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்!