சமீபகாலமாக கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை வாகனங்களில் ஏற்றி வந்து தமிழகத்தில் கொட்டி செல்வது அதிகரித்துள்ளது. குப்பைகளை ஏற்றி வரும் லாரிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘எனக்கு சொந்தமான வாகனம் மூலம் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளுமூடு ஊராட்சி பாலுக்குழி எனும் கிராமத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டியதாக ஊராட்சி தலைவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து எனது வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு செய்தேன். ஆனால், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘மனுதாரரின் வாகனம் வழியாக விதிமுறைகளை மீறி கேரள மருத்துவக் கழிவுகளை, தமிழகத்திற்கு கொண்டு வந்து கொட்டியுள்ளனர். இதுபோன்ற வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது’ என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, நீதிபதி கூறியதாவது, ”மருத்துவக் கழிவுகளை 48 மணிநேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு சட்ட விதிகள் உள்ளன. ஆனால், எதுவும் பின்பற்றாமல் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இது தீவிர குற்றச் செயலாகும்.
எனவே, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், டிஜிபி, உள்துறை செயலாளர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித் துறை செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து கொள்கிறது. இதுபோன்று விதிமுறைகளை மீறி மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரும் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டியதில்லை. அவற்றை பறிமுதல் செய்து வழிமுறைகளை பின்பற்றி ஏலத்தில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மனுதாரர் சிபுவின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.