Medical waste in the garbage dump

குப்பை மேட்டில் மருத்துவக் கழிவுகள்: டிரைவர்கள் தப்பியோட்டம்!

தமிழகம்

நகராட்சி குப்பை மேட்டில்  மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொட்டவந்த லாரிகளை பொதுமக்கள் தடுக்கச் சென்றபோது டிரைவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் நகராட்சிக்கு உட்பட்ட தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சுமார் 50,000 டன்னுக்கு மேலாக குப்பைக் கழிவுகள் குவிந்திருக்கும் நிலையில், அந்தக் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று நகராட்சியினர் தரம் பிரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து நாள்தோறும் ஒரு டன்னுக்கு மேலாக லாரிகளில் மருத்துவக் கழிவுகள் எடுத்து வந்து தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப்படுகிறது.

அதில் பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், கையுறைகள், முகக்கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து வருகின்றனர்.

இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 5) திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரியில் ஏற்றி வந்து,

அங்கு கொட்டியது தெரியாமல் இருப்பதற்காக ஜே.சி.பி எந்திரத்தை வைத்து அதன் மேல் மற்ற குப்பைகளைப் போட்டு மறைக்க முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு சென்றபோது லாரி டிரைவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து பேசியுள்ள பொதுமக்கள்,

“குப்பை கிடங்கு பிரதான சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை தலக்காஞ்சேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளே தரம் பிரிக்காமல் இருக்கும் நிலையில் மேலும் மருத்துவக் கழிவுகளையும் கொண்டுவந்து கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இவற்றை தடுக்க வேண்டும்.

அடிக்கடி குப்பைகளைக் கொளுத்துவதால் மூச்சு திணறல், சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்

வெங்காயத்தின் விலையும் விரைவில் உயரும்!

கிச்சன் கீர்த்தனா: அடிக்கடி 750 மில்லி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?

+1
0
+1
0
+1
2
+1
1
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *