சென்னை: மருத்துவ மாணவிகள் தற்கொலை முயற்சி!

தமிழகம்

சென்னையில், மருத்துவ கல்லூரி  மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்றிருப்பது  பெரும் , அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை அதிகரிப்பு

தமிழகத்தில் அண்மைக்காலமாக  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால் அங்கு பெரும் கலவரமும் ஏற்பட்டது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிய நிலையில் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தூக்கிலிட்டு தற்கொலை

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் விக்கிரவாண்டி அருகே பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரும் திடீரென கல்லூரியின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியவரை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

3 நாளில் 6 பேர் தற்கொலை

இதேபோல் திருவேற்காடு அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவரும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் முடி வெட்ட சொன்னதற்காக பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்தது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. தமிழ்நாட்டில், மூன்று நாட்களுக்குள் ஆறு மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு தேசிய அளவில் பேசு பொருளானது.

ஜூலை 13 முதல் 27ஆம் தேதிக்குள் 7 பேர் மொத்தமாக உயிரிழந்தனர். பள்ளிக்கூடங்களில் மாணவிகள் இறந்த நிகழ்வுகளில் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டாலும், மற்ற மரணங்கள் பெற்றோர் தரும் அழுத்தம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களாலேயே நிகழ்ந்திருக்கிறது.

மருத்துவ மாணவிகள் தற்கொலை

இந்த நிலையில், சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை வேப்பேரியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில்  தங்கியிருந்த 2 மாணவிகள் மெர்குரி சல்பைடு சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதை கண்ட மற்ற மாணவிகள் அவர்களை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் எதற்காக தற்கொலை முயற்சி செய்தனர் என்ற தகவல் தற்போது வரை தெரியவில்லை.

தமிழகத்திற்கு 2-வது இடம்

இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல். நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள பயந்தும்  மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

அதேசமயம் கல்வி நிறுவனங்களிலும் பெற்றோரும் படிக்கச்சொல்லி அழுத்தம் தருவதும் கூட மாணவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டச் செய்வதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் தற்கொலை தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்ப்பதும் கூட ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருப்பவர்களை தற்கொலை எண்ணத்திற்கு தூண்டும் என்று கூறுகின்றனர்.

மனநல ஆலோசனை தேவை

2 ஆண்டுகளுக்கு பின் பள்ளி திரும்பியுள்ள மாணவர்களுக்கு, கல்வியே ஒரு சுமையாக இருப்பதாக மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு கவனச் சிதறல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் படிப்பை ஒரு சுமையாகக் கருதாத அளவுக்கு, விளையாட்டு, பல்வேறு கலைகளில் திறனை வெளிப்படுத்தி, மனதை லேசாக வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும். மேலும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு, ஒவ்வொரு பள்ளிக்கும் மன நல ஆலோசகர்களையும் நியமிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கலை.ரா

15 பேரால் கடத்தப்பட்ட இளம்பெண்… மீட்கப்பட்டது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.