சர்ச்சைக்குரிய மருத்துவக் குறிப்புகளை தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு இன்று (ஜனவரி 24) நேரில் ஆஜரான சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா, கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புகளை தெரிவித்து வந்தார்.
அப்படி அவர் அளித்த மருத்துவ குறிப்புகளில் சில சர்ச்சையை ஏற்படுத்தின.
குறிப்பாக ஒரு தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும். குழந்தை பிறப்பதற்கு இறைவன் அருள் வேண்டும்.
குளோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்று அவர் கூறிய சில மருத்துவ குறிப்புகள் சர்ச்சையுடன் சேர்த்து கடுமையான விமர்சனங்களையும் பெற்றன.
இந்நிலையில், மருத்துவர் ஷர்மிகா, சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் தலைமையிலான வல்லுநர் குழுவின் முன்பு இன்று ஆஜராகி மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார்.
அதன் பின்னர் இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
”சமூக ஊடங்களில் சித்த மருத்துவம் குறித்து மாற்று கருத்துகள் தெரிவித்த மருத்துவர் ஷர்மிகா வல்லுநர் குழு முன்பு இன்று ஆஜரானார்.
அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வல்லுநர் குழு கேள்விகளை எழுப்பியது.
பின்னர் ஷர்மிகாவிடம் அவர் மீது அளிக்கப்பட்ட அனைத்து புகார்களின் நகல்களையும் கொடுத்து, அதுகுறித்து வரும் பிப்ரவரி 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம்.
ஷர்மிகா தரும் விளக்கத்தின் அடிப்படையில் வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா