மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிப்பதற்காக, 9-வது நாளாக வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஏப்ரல் 3-ஆம் தேதி வனத்துறைக்கு புகாரளித்தனர். இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இதனையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறுத்தையை பிடிப்பதற்காக ஐந்து சிறப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். ஏழு கூண்டுகளில் ஆடு மற்றும் ஆட்டிறைச்சிகள் வைக்கப்பட்டன.
செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு, ஊர்குடி ஆகிய பகுதிகளில் சிறுத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்ததால், சிறுத்தையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்து இருப்பிடத்தை தேடி வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தையின் கால் தடம் தென்படாத நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துளி பகுதியில் வசித்து வரும் ஹரிகரன் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்ததாக நேற்று இரவு வனத்துறைக்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து இன்று 9-வது நாளாக சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
சிறுத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்து வருவதால், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் ஹீரோ நடிக்கும் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்?.. அனிமல் இயக்குனர் அடுத்த சர்ச்சை.!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!