மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி வனத்துறைக்கு புகாரளித்தனர். இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தசூழலில், செம்மங்குளம் பகுதியில் இருந்து ஆரோக்கியநாதபுரம் பகுதிக்கு சிறுத்தை இடம்பெயர்ந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
திருச்சி மண்டல தலைமை வன அலுவலர் சதீஷ், மயிலாடுதுறை மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் முகமது ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனக்காப்பாளர்கள் மயிலாடுதுறைக்கு வந்தனர். மேலும், மதுரையில் இருந்து மூன்று கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டத்தால் ஆரோக்கியநாதபுரம் பகுதியை சுற்றியுள்ள ஏழு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சித்தர்காடு தண்டபாணி செட்டி பகுதியில் ஆடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளது. சிறுத்தை கடித்து ஆடு இறந்ததா என்று மருத்துவத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். தொடர்ந்து சிறுத்தை இடம்பெயர்ந்து வருவதால், சிறுத்தையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு சோனியா அனுப்பிய முக்கிய மெசேஜ்!
டிடி தொலைக்காட்சியில் ‘கேரளா ஸ்டோரி’: பினராயி விஜயன் எதிர்ப்பு!