மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
நேற்று முன் தினம் அதிகாலை மீண்டும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு சுற்றித் திரிந்த பன்றியை கடித்ததால் பதற்றம் நீடித்தது.
தொடர்ந்து, பொதுமக்கள் அநாவசியமாக வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி வரும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வனத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை ஆகிய துறைகளின் மூலம் 10க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்து தேடி வருகின்றனர்.
சிறுத்தை செம்மங்குளம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சென்று ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரிவதாக அதன் காலடித் தடங்கள் மூலம் தெரியவந்ததாக நேற்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த பகுதியில் ஆடு ஒன்று கழுத்தில் கடிபட்டு இறந்து கிடந்தது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிறுத்தையைப் பிடிக்க கூடுதலாக 3 ராட்சத கூண்டுகள், வலைகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை வரவழைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். மொத்தம் 16 தானியங்கி கேமராக்களை அமைத்துள்ளனர்.
இன்று காவிரி ஆற்றின் கிளை ஆறான பழங்காவெரிகரை பகுதி, பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
மூன்று நாட்களாக தேடியும் சிறுத்தை தேடுதல் குழுக்கள் கண்ணில் படமால் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடி சத்தம் எழுப்புவதாலும், சிறுத்தை இரவில் மட்டுமே அதிக நடமாட்டம் கொண்ட விலங்கு என்பதாலும் அதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகமும், வனத் துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
பிரியா
இராமநாதபுரம்: ஓ.பி.எஸ்-ன் பலாபழத்தை கூர்போடும் அதிமுக? ஏணியை தள்ளிவிடும் அமைச்சர்?
பக்கத்துக்கு பக்கம் மாநில உரிமைகள்…காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…வரலாறு மாறியது எப்படி?