நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவிற்கு பதிலளிக்குமாறு மதுரை ஆதீனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று(நவம்பர் 1) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை அப்போது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் நியமித்தார். இந்த நியமனம் கடும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் 2019ஆம் ஆண்டு அப்பொறுப்பில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சார்பில் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே மதுரை ஆதீனத்தின் 292ஆவது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் கடந்த 2021ஆம் ஆண்டு காலமானார். அதன்பின்னர் மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நித்தியானந்தா நியமனம் நீக்க வழக்கில் தற்போதைய மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சேர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “அருணகிரி நாதர் மறைவுக்கு பிறகு மதுரை ஆதீனமாக நானே பொறுப்பேற்க வேண்டும். தற்போதுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை 293வது மதுரை ஆதீனமாக ஏற்க முடியாது. அவருக்கு எந்த உரிமையும் இல்லை. நான்தான் மதுரை ஆதீனம்.
எனவே இந்த வழக்கில் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சேர்த்துள்ளது விதிமீறல். எனவே மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவிற்கு மதுரை ஆதீனம், இந்து அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா