மகள் vs பேரன் : நம்பியாரின் பொருட்கள் யாருக்கு?

தமிழகம்

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் என்றாலே தொடக்ககால சினிமா பார்வையாளர்களின் நினைவுக்கு வருபவர், மறைந்த எம்.என். நம்பியார்.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் கதாநாயகனாக வெற்றிபெறுவதற்கு அவருக்கு சமமான வில்லன் நடிகராக எம்.என்.நம்பியார் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரின் வெற்றிப்படங்களிலும் முக்கியமான வில்லன் நடிகராக ஆதிக்கம் செலுத்தியவர் நம்பியார்.

பிற்காலத்தில் விஜயகாந்த், பாக்யராஜ், விஜய் போன்றவர்கள் படங்களில் நல்லவராக- குணச்சித்திர வேடங்களிலும் முத்திரை பதித்தவர், நம்பியார்.

அவர் மறைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் பயன்படுத்திய பொருட்களும், அவருடைய படங்களும் யாருக்குச் சொந்தம் என பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவரின் குடும்பத்தினர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

எம்.என்.நம்பியாரின் மகன்கள் சுகுமாரன், மோகன், மகள், சினேகலதா. நம்பியாரின் சொத்துக்கள் பிரிக்கப்பட்டபின் சுகுமாரன் காலமாகிவிட்டதால், சுகுமாரனின் மகன் சித்தார்த் சுகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில், “என் தாத்தா நம்பியாரின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், விருதுகள் மற்றும் கோப்பைகள், சபரிமலை, ஐய்யப்பனின் ஓவியங்கள், பூஜை பொருட்கள் உள்பட அவர் பயன்படுத்திய பொருட்கள் என் அத்தை சினேகலதா வசம் உள்ளன. ஒரே குடும்பமாக இருந்தபோது, அந்த பொருட்களை அனைவரும் வைத்திருந்தோம். அந்த பொருட்களை எனக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட அத்தை சினேகலதா, தனியாகச் சென்றபிறகு, தற்போது தர மறுக்கிறார். எனவே அந்தப் பொருட்களை என்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கில் குறிப்பிடப்பட்ட விருதுகள், பூஜைப் பொருட்கள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, சினேகலதா நம்பியார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவில், “தன் தந்தை நம்பியார் பயன்படுத்திய பொருட்கள் தனக்குதான் சொந்தம். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று சினேகலதா கோரியிருந்தார்.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். அத்துடன், நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க புதிதாக ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவும் உத்தரவிட்டனர்.

இராமானுஜம்

வசூலில் ரூ.1000 கோடியை கடந்த ‘பதான்’!

இதுவரை 6 வீரர்கள் அவுட்… கடும் நெருக்கடியில் தவிக்கும் ஆஸ்திரேலியா

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *