Matchbox production resumed in Kovilpatti

இயல்பு நிலைக்குத் திரும்பிய கோவில்பட்டி: ரூ.100 கோடி தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி!

மழை ஓய்ந்து இயல்புநிலை திரும்பியதால் கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பிரதான தொழிலாக தீப்பெட்டி தொழில் இருந்து வருகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 90% இங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. தீப்பெட்டி தொழிலில் 90 சதவிகிதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தீப்பெட்டி மற்றும் தீப்பெட்டி சார்புடைய தொழில்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக தீப்பெட்டி தொழில் அடியோடு பாதிக்கப்பட்டது.

மழையின்போது கோவில்பட்டி பகுதியில் உள்ள வெள்ளை குச்சி தயாரிக்கும் பல்வேறு ஆலைகளில் இயந்திரங்களில் மழைநீர் புகுந்ததால் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

உற்பத்தி தொடங்கினாலும் வெள்ளை குச்சியை காய வைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தொடர் மழையினால் கிராமப்புறங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து வசதி இல்லாமல் தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

கோவில்பட்டியில் உற்பத்தி செய்யக்கூடிய தீப்பெட்டி பண்டல்கள், தூத்துக்குடி துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் தீப்பெட்டி பண்டல்கள் அனுப்புவது வழக்கம். தொடர் மழை பாதிப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் கோவில்பட்டியில் மழை ஓய்ந்து இயல்புநிலை திரும்பியது. பழுதான சாலைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் கோவில்பட்டி – தூத்துக்குடி இடையே மழையால் சேதமான சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

இதையடுத்து கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல் கோவில்பட்டியில் இருந்து மும்பை, கர்நாடகா, இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வழக்கம்போல் தீப்பெட்டி பண்டல்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இயல்புநிலை திரும்பி தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் உற்பத்தி வழக்கம்போல் நடைபெற்று வருவதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வேர்க்கடலை சாட்!

டிஜிட்டல் திண்ணை: கடைசியாய் ஒருமுறை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம்! விஜயகாந்த் அஞ்சலி ஸ்பாட் மாறிய பின்னணி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts