முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி ஆதம் பாஷாவை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர். இவர் அதிமுகவில் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்து வந்தார். அதிமுகவிலிருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அவரது வீட்டிலிருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பழவேலி அருகே வந்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் மஸ்தானின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மஸ்தானின் தம்பி ஆதாம் பாஷாவை கூடுவாஞ்சேரி போலீஸார் இன்று (ஜனவரி 13 ) கைது செய்துள்ளனர்.
கொடுத்த கடனை மஸ்தான் திருப்பிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவருடைய தம்பி ஆதம் பாஷாவும் இந்த கொலையில் ஈடுபட்டது தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
’’ராகுல் கிட்ட இருக்குற பிரச்சனையே இது தான்’’ – அசாருதீன்