10 ஆம் வகுப்பு தேர்விலும் மாஸ் ஆப்சென்ட்? ஆசிரியர்களுக்கு உத்தரவு! தலையிடுவாரா அன்பில் மகேஷ்?

Published On:

| By Aara

மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கிய பிளஸ் டு தேர்வில் தமிழ், ஆங்கில மொழிப் பாடத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் வரை ஆப்சென்ட் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பற்றி மார்ச் 24 ஆம் தேதி சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தாலும்… அது தொடர்பான விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை விழித்துக் கொண்டு அடுத்து வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்க இருக்கும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் இதேபோல, ’மாஸ் ஆப்சென்ட்’ எனப்படும் பெருங்கூட்ட மாணவர்கள் வராமல் போய்விடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்.

ஆனால், இதற்காக ஆசிரியர்களை பாடாய் படுத்துகிறார்கள் என்ற குமுறல் ஆசிரியர் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.

ஆசிரியரும் எழுத்தாளருமான சுகிர்த ராணி இது தொடர்பாக தனது சமூக தளப் பக்கத்தில் ஒரு பதிவை இன்று (மார்ச் 31) வெளியிட அது பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுகிர்த ராணி தனது பதிவில், “வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் யாரும் ஆப்சென்ட் ஆகக் கூடாது என கல்வித்துறை பல அறிவுறுத்தல்களை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது.

பத்தாம் வகுப்பில் ஒருநாள்கூட பள்ளிக்கு வராமல்… ஆனால் நாமினல் ரோலில் பெயர் இருக்கக்கூடிய மாணவர்கள்தான் தேர்வுக்கு வருவதில்லை. இவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் வேறு ஊர்களுக்கு வேலைதேடி புலம் பெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் தொடர்பு எண்ணோ முகவரியோ இல்லை. மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கோ பெங்களூரு போன்ற நகரங்களுக்கோ சென்றவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் அந்தந்த வகுப்பாசிரியர்கள் ,என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ தெரியாது அந்த மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

முகவரியும் இல்லை, தொலைபேசி எண்ணும் இல்லை. அவர்களை எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது? ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்குச் செல்வதா? ஊர் ஊராக மாணவர்களைத் தேடித் திரிவதா? இது சாத்தியமா? அப்படியே கண்டுபிடித்தாலும் அம்மாணவருக்குத் தேர்வு எழுத விருப்பம் இல்லை. பெற்றோரும் அவன் வந்தால் அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்கிறார்கள்.

ஆசிரியர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்கள். வலுக் கட்டாயமாக அவனைத் தூக்கிக் கொண்டு வரமுடியுமா? அப்படியே தேர்வுக்கு வந்தாலும், ஒருநாள்கூட பள்ளிக்கு வராத அவர்கள், என்ன எழுதுவார்கள்? யாரும் ஆப்சென்ட் ஆகவில்லை என்று பெருமையாக அறிவித்துக் கொள்ள மட்டும் அது உதவும்” என்று குறிப்பிட்டிருக்கிற ஆசிரியர் சுகிர்த ராணி மேலும்,

கல்வித்துறை எல்லா பாரத்தையும் ஆசிரியர்கள்மேல் ஏற்றி வைக்கிறது. அறிவியல் செய்முறைத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இன்னொரு தேர்வு வைக்கச் சொல்லியிருக்கிறார்கள். புலம் பெயர்ந்த மாணவர்களை எப்படி வரவழைப்பது? எப்படியோ எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாலும் கட் செய்து விடுகிறார்கள். வர முடியாது என்கிறார்கள். ஆசிரியர்கள் வெளியே சொல்ல முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பள்ளி மேலாண்மைக் குழுவும் என்ன செய்துவிட முடியும்? புலம் பெயர்ந்த அல்லது நீண்ட காலமாக பள்ளிக்கு வராத மாணவர்களைத் தேர்வுக்குக் கொண்டுவர, சமூக நலத்துறை, மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?
கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் நிலையைப் புரிந்து கொள்ளாத கள நிலவரத்தைத் தெரிந்து கொள்ளாத கல்வி மேலதிகாரிகள் இருக்கும்வரை கற்றல் கற்பித்தல் என்பது சுமையாகவே இருக்கும். ஆசிரியர்களும் மனிதர்கள்தான்” என்று கூறியுள்ளார்.

கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்து பேசியபோது, “ஆசிரியர்களை ஆசிரியப் பணி மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கென தனி அலுவலர்களை நியமிக்கச் சொல்லுகிறார்கள். ஆனால் மாணவர்களோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் அதிகாரிகள் அல்ல ஆசிரியர்கள்தான். எனவேதான் ஆசிரியர்களிடம் இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

பள்ளிக் கல்வித் துறைக்குள் நடக்கும் நிர்வாக சிக்கல்களை ஆசிரியர் சுகிர்த ராணியின் இந்த பதிவு எடுத்துக் காட்டுகிறது. துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதில் தலையிட வேண்டும் என்று ஆசிரியர்கள் விரும்புகிறார்கள்.

-வேந்தன்

குட்டி ரசிகைக்கு கியூட் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்!

பள்ளிக்கல்வி துறைக்கு புதிய 26 அறிவிப்புகள்!

Mass absent in 10th exam too
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share