மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் ஏசி அரங்குகள், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணிவது நல்லது எனச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் 25.12.2022 முதல் 01.01.2023 அன்று வரை கண்காட்சி நடைபெற உள்ளது.
இதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ அன்பரசன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், `நேற்று முன் தினம் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துத் தெரிவித்தேன்.
முன்னதாக சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் 2 சதவிகிதம் ரேண்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு கூறியது.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஹாங்காங், சீனா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 100 சதவிகிதம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வாக வரவில்லை என்றாலும், தமிழகத்துக்கு மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 100 சதவிகிதம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை எல்லாம் ஏற்கனவே இருக்கிற நடைமுறை. அது விலக்கிக்கொள்ளப்படவில்லை.
வணிக நிறுவனங்கள், குளிர்சாதன வசதி உள்ள பெரிய அரங்குகளுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. தினசரி 5000 பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது.
எந்த பகுதியிலாவது இரண்டு பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களது மாதிரிகள் மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
தமிழகத்தில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதால் 6,7 மாதங்களாக உயிரிழப்பு இல்லாத நிலை இருக்கிறது` என்றார்.
பிரியா
அமெரிக்காவில் பனிப்புயல்: விமானங்கள் ரத்து!
கோவை கார் வெடிப்பு: ஜமேஷா முபீன் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி!