ஒருமாதத்திற்கு முன்பு வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 198 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவ கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 6 அழகு சாதன பொருட்கள் இன்று (ஏப்ரல் 5) சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்திய அளவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700 ஆக உள்ளது. அதற்கு முன் தினம் 300 ஆக இருந்த நிலையில் ஒரேநாளில் 400 அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒருமாதத்திற்கு முன்பு வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 198 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புதிய வகையிலான உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது.
மத்திய அரசு சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரத்து 333 அரசு மருத்துவ நிர்வாகங்களிலும் கடந்த 1ஆம் தேதி முதல் 100 சதவீதம் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க அறிவுறுத்தியுள்ளோம்.
தற்போது மருத்துவமனைகளில் கட்டாயப்படுவது போன்று அனைத்து இடத்திலும் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்தவில்லை.
அதேவேளையில் பாதுகாப்பு அவசியம் கருதி நாம் எப்போதும் முககவசம் அணிந்தாலும் தவறில்லை.
மேலும் இந்த கொரோனா பாதிப்பானாது இதுவரை கிளஸ்டர் பாதிப்பாக இல்லாமல், தற்போது தனி மனிதர்களுக்கு இடையே மட்டுமே பரவி வருகிறது. ஆனால் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.
கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனைகளில் பேரில் தங்களையே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும்!: தலைவர்கள் கண்டனம்
”நான் செய்த ஒரே குற்றம்”: டொனால்ட் ட்ரம்ப்