காலை நேரத்தில் பூரி செய்யலாம் என்று நினைப்பவர்கள் வழக்கமான பூரிக்கு பதில் இந்த மசாலா பூரி செய்து அசத்தலாம். இந்த பூரியில் ஊட்டச்சத்துகள் அதிகம். இந்த மசாலா பூரிக்குக் கடலை சென்னா வைத்துச் சாப்பிட்டால், புரதச்சத்து கூடுதலாகக் கிடைக்கும். காலையில் சாப்பிட ஏற்ற உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
கோதுமை மாவு – ஒரு கப்
துருவிய கேரட் – கால் கப்
பொடித்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த மாங்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
பால் – மாவு பிசையத் தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது- ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவில் உப்பு, மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, துருவிய கேரட், பொடித்த வேர்க்கடலை சேர்த்து, பால் விட்டுக் கெட்டியாகப் பிசைய வேண்டும். பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.