கிச்சன் கீர்த்தனா: மருந்துக்குழம்பு!
மழை மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் பசியின்மை, அஜீரணம் மற்றும் உடல்சோர்வு ஆகியவற்றுக்கு அருமருந்து இந்த மருந்துக்குழம்பு. நான்கு நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடக்கூடியது. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுகமானதாக இருக்கும்.
என்ன தேவை?
மணத்தக்காளி வற்றல் – கால் கப்
தோலுரித்த சின்ன வெங்காயம் – ஒரு கப்
பூண்டு – 20 பல்
புளி – எலுமிச்சை அளவு
சுக்கு – ஒரு அங்குலத்துண்டு
மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்
திப்பிலி – 10 குச்சிகள்
மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
வெல்லம் – சிறிய துண்டு
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், மல்லி (தனியா), வெந்தயம், பாதி மணத்தக்காளி வற்றல், கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து ஆறவிட்டு பிறகு ஒன்று சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
புளியை கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மீதமுள்ள மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து அரைத்த பொடியை, சிறிது நீரில் கலக்கி கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை, ‘சிம்’மில் வைத்து கொதிக்கவிட்டு பிறகு இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: மணத்தக்காளி வற்றலுக்கு பதிலாக சுண்டைக்காய் வற்றலும் உபயோகிக்கலாம்.
வீட்டிலேயே ஆந்திரப் பருப்புப் பொடி!