சென்னை மயிலாப்பூரில் 15 வயது சிறுவனுக்கும், 9 வயது சிறுமிக்கும் பெற்றோரே திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் அது குழந்தைத் திருமணமாக கருதப்படும் என்றும், அக்குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என்றும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எனினும் 21ஆம் நூற்றாண்டிலும் குழந்தை திருமணங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றதும், அதற்கு ஆதரவாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதும் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்ததது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் சென்னை மயிலாப்பூரில் குழந்தை திருமணத்தை பெற்றோரே நடத்தி வைத்துள்ள அவலம் தற்போது தெரிய வந்துள்ளது.
சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதாவுக்கு கடந்த 15ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் அவர்களின் பெற்றோர்கள் ‘குழந்தை திருமணம்’ செய்து வைத்ததுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஹரிதா, பாதிக்கப்பட்ட சிறார்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது இரு வீட்டார் சம்மதத்துடன் தான் குழந்தைகள் திருமணம் நடந்து முடிந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஹரிதா புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுவனை மீட்டு கெல்லீஸ்சில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து திருமணத்தை நடத்தி வைத்த சிறுமியின் தாய், தந்தை, மற்றும் சிறுவனின் தந்தை ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், குழந்தைகள் இருவரின் பெற்றோருக்கும் சம்மன் அனுப்பியுள்ள போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சமயபுரம் சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்: வேன் மோதி 5 பேர் பலி!
சொதப்பிய ‘இந்தியன் 2’: ஷங்கருக்கு கைகொடுக்குமா ‘கேம் சேஞ்சர்ஸ்’?