ரூ.1 லட்சம் கோடி கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு: எல்.முருகன்

தமிழகம்

2024-25ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அந்தமான் தொழில் வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் போர்ட் பிளேரில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். அந்தமான் தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் சுரேந்தர் பிரகலாத் தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில், மீன்வளம், சுற்றுலா, எளிதில் தொழில் மேற்கொள்வதற்கான அரசின் வழிமுறைகள், அதற்கான அனுமதி தொடர்பான விஷயங்கள் குறித்து எல்.முருகனிடம் தொழில்துறையினர் விளக்கி, பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இதையடுத்து பேசிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், “அந்தமான் தொழில் வர்த்தகத் துறை பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும். 2024-25ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது ரூ.43,000 கோடியாக உள்ளது. 2022-23ஆம் ஆண்டில் ரூ.60,000 கோடிக்கு கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுத்தமான மீன்கள், குளிர்பதன கிடங்குகள் போன்றவை மூலமே சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே அதை கருத்தில்கொண்டே பிரதமரின் ‘மத்சய சம்படா’ திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *