மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை நாளை (ஜூலை 6) முதல் ஓராண்டுக் காலத்திற்கு மூடப்படவுள்ளது.
சென்னையில் 63,245 கோடி மதிப்பில் 118.9கி.மீ தொலைவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ தொலைவிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தொலைவிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ தொலைவிலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ பணிகளுக்காகப் பல இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ரயில் சேவையை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் கலங்கரை விளக்கம் பகுதியில் நடைபெற்று வருகின்றன.
இதில், காந்தி சிலைக்குப் பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பயன்படுத்த இயலாது.
இதன் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் 6-ம் தேதி (நாளை) முதல் ஒரு வருடத்துக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
லூப் ரோடு மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, அவர்கள் ‘யூ-டர்ன்’ செய்து கலங்கரை விளக்கம் வந்தடைந்து, வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
போர் நினைவுச்சின்னத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லவிரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம்.
அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் ‘யூ-டர்ன்’ செய்து இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.
எனவே, இதற்கு வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா