சக மாணவரை ஆறு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவத்திற்கு மாரி செல்வராஜ், மோகன் ஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே உள்ள நாங்குநேரியில் வசித்து வரும் தம்பதியினர் கூலி தொழிலாளி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.
பிளஸ் 2 படித்து வரும் சின்னத்துரையை அதே பள்ளியில் படிக்கும் வேறு சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ந்து ராகிங் செய்து வந்துள்ளனர். இது குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் சின்னதுரை புகாரளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் வீடு புகுந்து சின்னதுரையையும், தடுக்க வந்த அவரது தங்கையையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பியோடிவிட்டனர்.
உடல் முழுவதும் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு ஆரம்ப கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சக மாணவனை ஆறு மாணவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிக்கட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போக சொல்லி, உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், தனது எக்ஸ் பக்கத்தில், “தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் மோகன்ஜி, “மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளரும், விசிக செய்தி தொடர்பாளருமான விக்ரமன், “பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள் 17 வயது சின்னத்துரையும் அவர் தங்கையும். செய்தது உடன் படிக்கும் மாணவர்கள். மனம் பதைபதைக்கிறது. சாதி குழந்தைகளையும் மிருகமாக்கிவிட்டது. சின்னத்துரையும் தங்கையும் உடல்நலம் தேறி மீண்டு வர வேண்டும்.” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜி தம்பி மாமியாருக்கு அமலாக்கத்துறை சம்மன்!
கயிற்றில் இருந்த சாதி வன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது!