கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தையே மகனை கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (45). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இவருடைய மகன் சுபாஷ் (25) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்துள்ளார்.
ஆனால், சுபாஷ் மற்றும் அனுஷா இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், தண்டபாணி இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே அனுஷா வீட்டில் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் திருப்பத்தூரில் குடியேறிய சுபாஷ், அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
மகன் தன்னுடைய எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் கோபத்தில் இருந்த தண்டபாணி, தனது தாய் கண்ணம்மாளிடம், சுபாஷை அவரது மனைவியுடன் வீட்டிற்கு விருந்திற்கு வர சொல். சமாதானம் பேசிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
சுபாஷின் பாட்டி கண்ணம்மாள் தான், பேரனின் காதலுக்கு முழு ஆதரவு தெரிவித்ததோடு, திருப்பத்தூரில் வாடகை வீடும் பார்த்து கொடுத்துள்ளார். எனவே, தந்தை மற்றும் மகனுக்கு இடையே சமாதானம் செய்து வைக்கலாம் என்று தண்டபாணி சொன்னதை நம்பிய கண்ணம்மாள், தனது பேரன் சுபாஷ், அவரது மனைவி அனுஷா ஆகியோரை தமிழ் புத்தாண்டுக்கு அருணபதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார்.
பாட்டியின் அழைப்பை ஏற்று சுபாஷ் மனைவி அனுஷாவை அழைத்துக் கொண்டு கண்ணம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். கண்ணம்மாள் வீட்டிற்கு ஏற்கனவே வந்திருந்த தண்டபாணி இருவரிடமும் சகஜமாகப் பேசியுள்ளார். தொடர்ந்து அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) அதிகாலை தண்டபாணி சுபாஷை கூர்மையான கத்தியால் வெட்டியுள்ளார். சுபாஷின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி கண்ணம்மாள் மற்றும் மனைவி அனுஷா இருவரும் தண்டபாணியைத் தடுக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் இருவரையும் தண்டபாணி கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அனுஷா தப்பித்து ஓட முயற்சித்துள்ளார். ஆனால் அவரை துரத்தித் துரத்தி வெட்டியுள்ளார். அப்போது அனுஷா மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து தண்டபாணி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளியவே அனுஷா வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு சுபாஷ் மற்றும் கண்ணம்மாள் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியே வந்த அனுஷா மீண்டும் மயங்கி விழுந்துள்ளார். காலை விடிந்தவுடன் வீட்டிற்கு வெளியில் ரத்த காயங்களுடன் மயங்கிக் கிடக்கும் அனுஷாவைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சுபாஷ் மற்றும் கண்ணம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அனுஷா ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை போலீஸார், தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை, கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமறைவான கொலையாளி தண்டபாணியை விரைவில் கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுத் தரப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் கடந்த 30 நாட்களுக்குள் 2வது முறையாக நடைபெற்ற ஆணவக் கொலை அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி ஜெகன் என்ற இளைஞர் காதல் திருமணம் செய்த விவகாரத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் துரத்தித் துரத்தி பெண் வீட்டார் வெட்டி கொன்றனர்.
அதன் வடுவே இன்னும் மறையாத நிலையில், தற்போது நடந்த இந்த கொடூரச் செயலுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மோனிஷா
ஐபிஎல் போட்டி: விராட் கோலி சாதனை!
ரூ.31.8 கோடிக்கு கேமரூனின் ஒரு பகுதியை வாங்கிய நித்தியானந்தா?