மாஞ்சோலை… மறக்க முடியாத வரலாறு : திக்கற்று நிற்கும் தொழிலாளர்களை திரும்பி பார்க்குமா அரசு ?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

– கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

அடர் காடுகளாக இருந்து பின்னர் பசுந்தேயிலை உற்பத்தி செய்த நிலங்கள் மீண்டும் பசுமைச் சோலையாக மாறப்போகிறது என்கிற செய்தி ஒருபக்கம் வந்தாலும், மறுபுறம், காலங்காலமாக உழைத்த நிறுவனம் பொறுப்பற்று கைவிரிக்க, குடிமக்களைக் கண்டும் காணாமல் அரசும் வேடிக்கை பார்க்க, சொந்த நாட்டில் அகதிகள் போன்று திக்கற்று நிற்கிறார்கள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.

கடல் பரப்பில் இருந்து 2300 அடி முதல் 4200 அடி வரை உயரமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான “மாஞ்சோலை” அதிக மழை பொழியும் இடமாக இருப்பதால் மழைச்சோலை என்றும் அழைக்கலாம்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா களக்காடு முண்டந்துறை புலிகள்  காப்பக வனத்தில் இருக்கும் மாஞ்சோலை இந்திய விடுதலைக்கு முன்னர் திருவிதாங்கூர் பகுதிக்கு உட்பட்டதாக இருந்தது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு விஸ்வநாத நாயக்கர் நிர்வாகத்தில் 72 பாளையங்கள் இருந்தன. அதில் ஒரு பகுதியை சிங்கம்பட்டி பாளையக்காரர் நிர்வகித்தார். பாளையக்காரர்கள் பின்னாட்களில்  ஜமீன்தாரர்களாக மாறினார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்டவர்மாவுக்கும், எட்டு வீட்டுப் பிள்ளைமாருக்கும் ஏற்பட்ட சண்டையில் மார்த்தாண்ட வர்மாவுக்கு உதவி செய்ய சென்ற சிங்கம்பட்டி ஜமீனின் மகன் மரணமடைந்தார்.

அந்த உதவிக்காக மார்த்தாண்ட வர்மா இன்றைய தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் இருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்கு எழுதிக்கொடுத்தார். அந்தக் காடுகளை குச்சி ஒடிக்கப் பயன்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் சென்னை அண்ணாசாலை தற்போது DMS இருக்குமிடத்தில் Newington College செயல்பட்டு வந்தது. அதில் பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்களின் குழந்தைகள் படித்து வந்தனர். அதனால் அதனை Minor Bungalow என்றும் அழைப்பார்கள்.

அக்கல்லுரியின் முதல்வர் Clement De la Haye தனது மனைவியுடன் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது 15 October 1919 அன்று நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 16 வயது சிங்கம்பட்டி ஜமீனும் , 18 வயது கடம்பூர் ஜமீனும் சிக்கிக் கொண்டனர்.  அந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கில் இருந்து விடுபட அதிகம் செலவானதால், மாஞ்சோலை காட்டுப்பகுதியை The Bombay Burmah Trading Corporation Limited நிறுவனத்திற்கு சிங்கம்பட்டி ஜமீன் 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்தார் .

1929 பிப்ரவரி 12 அன்றைய ஒப்பந்தப்படி 804 ஹெக்டேர் காட்டுப்பகுதிக்கு முன்பணமாக 88 ரூபாய்,  குத்தகை தொகையாக 1 ஹெக்டேருக்கு 4 ரூபாய் 32 பைசா வீதம் ஆண்டு தோறும் கொடுக்க வேண்டும்.

அப்பகுதியில் காடுகளை அழித்து தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு பயிரிட்டது பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம். இந்நிறுவனத்தின் சிங்கம்பட்டி குரூப் ஆஃப் எஸ்டேட் போல, வால்பாறையில் 1863 ஹெக்டேர் பரப்பில் முடிஸ் எஸ்டேட், நீலகிரியில் 155 ஹெக்டேர் பரப்பில் எஸ்டேட் என 2822 ஹெக்டேர் பரப்பில் ஒரு வருடத்திற்கு சுமார் எண்பது லட்சம் கிலோ டீ தூள்  உற்பத்தி செய்கிறார்கள். தாமிரபரணி நீர்ப்பிடிப்பு பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் 1992 முதல் ஊத்து ஆர்கானிக் டீ உற்பத்தி செய்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் பத்து லட்சம் கிலோ ஊத்து ஆர்கானிக் டீ உற்பத்தி செய்தனர்.

தற்போது மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிக்கு (ஜமீன் சிங்கம்பட்டி கிராமம், பகுதி 2, சர்வே எண் 251) திருவிதாங்கூர் சமஸ்தானம் முதலே யாரிடமும் பட்டா கிடையாது.

The Bombay Burmah Trading Corporation Limited நிறுவனத்திற்கு சிங்கம்பட்டி ஜமீன் கொடுத்த 99 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தம் என்பது இந்திய விடுதலைக்குப் பின்னர் 1952இல் கொண்டு வரப்பட்ட ஜமீன்தாரி முறை ஒழிப்பு ரயத்துவாரி சட்டத்தால் செல்லாத ஒன்றாகிவிட்டது.

1958 ஆகஸ்ட் 13 அன்றைய தமிழ்நாடு அரசு வருவாய்துறையின் அறிவிப்பின்படி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. 1929 இல் போடப்பட்ட ஒப்பந்தப்படி 2028 வரை மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளை தொடர்ந்து அனுபவித்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் போடப்பட்ட மொத்தமுள்ள 8,373 ஏக்கர் 57 சென்ட் காடுகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பகுதிகளில் தேயிலை பயிரிட்டும், சுமார் 500 ஏக்கர் பகுதிகளில் குடியிருப்புகள், அலுவலகங்களும் இருந்தன.

இந்த 8374 ஏக்கர் உள்ளிட்ட காடுகள் 1976இல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 1978இல் பட்டா இல்லாத ஒப்பந்த நிலத்திற்கு பட்டா கேட்டு பிபிடிசிஎல் நிறுவனம் வழக்குத் தொடுத்தது. 2017இல் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒப்பந்த காலம் முடியும் போது வனத்துறையிடம் நிலத்தை ஒப்படைக்கக் கூறியது. மேல்முறையீட்டு வழக்கில் 2018இல் உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்தது.

2028 வரை ஒப்பந்த காலம் இருந்தாலும் 2024ஆம் ஆண்டிலேயே தேயிலை உற்பத்தியை நிறுத்துகிறது பிபிடிசிஎல்  நிர்வாகம். அவசர அவசரமாக விருப்ப ஓய்வு கொடுக்கிறது.
தற்போது பணியிலிருக்கும் 562 தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வின் அடிப்படையில் ஓய்வுபலன் தொகை 25 விழுக்காடு வழங்கியுள்ளனர்.

அவர்கள் வீடுகளை காலி செய்து ஆகஸ்ட் 7க்குள் சாவி கொடுத்தால் மீதமுள்ள 75 விழுக்காடு ஓய்வுபலன் வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதியெல்லாம் பின்னர்தான் கிடைக்கும்.

ஓய்வுபலன் தொகை என்பது 53 வயதுக்கு கீழ் ரூ.2,22,000, 56 வயதுக்கு மேல் 3,53,000, 53 வயது முதல் 56 வயது வரை 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிட்டு வழங்குகிறார்கள். இரத்தம் உறிஞ்சும் அட்டைக்கடியிலும், கொட்டும் மழையிலுமாக போராட்டமே வாழ்க்கையாகிப்போன எஸ்டேட் மக்கள் இப்போது போராடுவதற்கும் தெம்பற்று தேம்பி நிற்கின்றனர்.

May be an image of 3 people

1968 இல் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்ட போதும், 1978 இல் தேயிலைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கேட்டும், 1988 இல் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல காலையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் வேண்டும் என்றும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் போராட்டங்கள் நடந்துள்ளது.

1998ஆம் ஆண்டு அன்றைய தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி  தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சனைகளை கேட்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். தமிழ் மாநிலக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உடன் இணைந்து புதிய தமிழகம் கட்சி 23.07.1999 அன்று திருநெல்வேலியில் நடத்திய பேரணியில்  காவல்துறையின் தடியடியால் தாமிரபரணி ஆற்று நீரில் மூழ்கடித்து 17 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் அடிப்படை ஊதியம் 33 ரூபாய், தினக்கூலி 53 ரூபாய் உட்பட 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

2024 ஆம் ஆண்டு தற்போது மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் தினக்கூலி 453 ரூபாய் தான்.

1929இல் காடுகளாக இருந்த பகுதியை சீரமைத்து தேயிலைத் தோட்டங்களாக மாற்றியவர்கள் அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை ஜில்லா தொழிலாளர்கள். தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், ஆதி திராவிடர், நாடார், மறவர், வண்ணார், ஆசாரி, பிள்ளை, கேரளாவின் ஈழவர், பணிக்கர், மாப்பிள்ளை கிறிஸ்தவர், நாயர் என்று அனைத்து சாதி சார்ந்தும், இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று அனைத்து மதம் சார்ந்தும் தொழிலாளர்கள் நிறைந்த மாஞ்சோலை ஒரு சமத்துவப் பூங்காவாகவே திகழ்ந்தது.

இப்போது, அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், கோயில், சர்ச், மசூதி வழிபாட்டுத்தலங்கள், தபால் நிலையம், போக்குவரத்து வசதிகள், குடியிருப்புகள், முன்னோர்களின் நினைவிடங்கள் என்ன ஆகுமென்று தெரியவில்லை.
இடத்தைக் காலிசெய்ய சொல்லிவிட்டார்கள், நான்கைந்து தலைமுறைகளாக தேயிலைத் தோட்டத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்களுக்கு வேறு வேலைகள் தெரியாது.

மலைப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு சமவெளிப் பகுதியின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான், தொழிற்சங்க உரிமைகளை வழங்காத, தொழிலாளர் நல சட்டங்களை பின்பற்றாத பிபிடிசிஎல் தனியார் நிறுவனத்தோடு அரசே பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான உரிய ஓய்வூதிய பணபலன்களை அரசே பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

வெளியேற விரும்புகிற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் பிபிடிசிஎல் நிறுவனம் ஓய்வுபலனாக வழங்க வேண்டும். விரும்பிய இடத்தில், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு வசதிகளோடு அரசே குடியிருப்பு வசதியை செய்து தர வேண்டும்.

மலைப்பகுதியை விட்டு வெளியேற விரும்பாத தொழிலாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலுக்கு உகந்த பயிர்களைப் பயிரிட்டு வாழ நினைத்தால் அவர்களை அனுமதித்து குடும்பத்திற்கு  5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும்.

அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவுப் படியும்  மாஞ்சோலை மலைப்பகுதியின் சுற்றுச்சூழல் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு  மீட்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி, திட்டம் வகுத்து, அங்கேயே வாழ நினைக்கும் தோட்டத்  தொழிலாளர்களை  வனத்துறையினருடன் தகுதிக்கேற்ப இணைத்து பூர்வகுடி மக்களின் பங்கேற்புடன்  திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தொழிலாளர் நலன் காத்து, மக்களுடன் இணைந்த மாஞ்சோலை பல்லுயிர் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. நிறைவேற்றுமா அரசு?

துணை நின்றவை 

மாஞ்சோலை கள ஆய்வு
Madras-District-Gazetteers-1917
https://www.tamildigitallibrary.in/archaeology-details.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9
https://crazyteamakerblog.wordpress.com/2017/07/02/singampatti-group-manjolai-hills/comment-page-1/
https://maddy06.blogspot.com/2022/03/the-de-la-hey-case.html
http://www.dlhey.com/2013/04/intrigue-in-orient.html?m=1
https://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/thamirabarani-massacre-manjolai-labourers-massacre-history-and-background-114072300049_1.html
மனசெல்லாம் மாஞ்சோலை, இ.பினேகாஸ், நிவேதிதா பதிப்பகம்.

ஓர்மைகள் மறக்குமோ – மாஞ்சோலை, அரசு அமல்ராஜ், காலச்சுவடு பதிப்பகம்.
https://bbtcl.com/
https://kmtr.co.in/
https://tirunelveli.nic.in/

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!

எம்.சி.ராஜா : சட்டமன்றத்தில் சமத்துவத்துக்காக ஒலித்த முதல் குரல்!

சவூதியில் வீசும் கொடூர வெப்ப அலை… 19 ஹஜ் பயணிகள் உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *