வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக போலி வீடியோ பரப்பிய வழக்கில் பீகார் மாநில யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை மேலும் ஒரு வழக்கில் நீலாங்கரை போலீசார் இன்று (ஏப்ரல் 12) கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கடந்த சில மாதத்திற்கு முன்பு போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோக்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் போலி வீடியோக்களை பரப்பிய நபர்களை தமிழக காவல்துறை கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக போலி வீடியோக்களை பரப்பிய பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது ஜெகதீசன் என்பவர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்கும் வகையில் போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனிஷ் காஷ்யப் பீகார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து மதுரை மாவட்ட போலீசார் செய்த வழக்குப்பதிவின் பேரில் பீகார் சென்று யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தனர்.
அவரை மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு காஷ்யப்பிற்கு வரும் 19ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மணிஷ் காஷ்யப் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போலி வீடியோ பரப்பிய யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் கடந்த 6ம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில் காஷ்யப் மீது போலி வீடியோ தொடர்பாக மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ள நீலாங்கரை போலீசார் மதுரை சென்று மணீஷ் காஷ்யப்பை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி உள்ளனர்.
அவரிடம் போலீஸ் காவல் எடுத்து விசாரணை நடத்த அடையாறு சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
கலாஷேத்ரா : மனித உரிமை ஆணைய விசாரணை தொடங்கியது
பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது: அண்ணாமலை கண்டனம்!