மணிப்பூர் வீடியோ : போராட்டத்தில் குதித்த சென்னை மாணவர்கள்!

Published On:

| By Kavi

Manipur Video student protest

மணிப்பூர் பெண்களை கொடுமைப்படுத்திய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் ஏறத்தாழ 3 மாதங்களாக வன்முறை மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் உச்சகட்டமாக பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

இது தொடர்பான வீடியோ வெளியாகி இரண்டு நாட்களாக நாட்டு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் இன்று (ஜூலை 21) மாலை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகள் முடிந்த பிறகு வீடு திரும்பும் போது இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, பதாகைகளையும் மாணவர்கள் கையில் ஏந்தி இருந்தனர். அதில், “இன்று மணிப்பூர்… நாளை தமிழ்நாடு…” என்று குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

https://twitter.com/i/status/1682360856292601857

ரயிலின் மீது ஏறி இந்த பதாகைகளை ஒட்டியும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் மீனம்பாக்கம் போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மாணவர்களின் போராட்டத்தால் அரை மணி நேரம் சென்னை கடற்கரை டு அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

பிரியா

மணிப்பூர் வன்கொடுமை: கைதான 4 பேருக்கு 11 நாள் காவல்!

இரும்புத் தூணில் சிக்கிய குழந்தையின் தலை… ரயில் நிலையத்தில் பரபரப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel