மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வாழ் மணிப்பூர் மக்கள் இன்று (ஆகஸ்ட் 2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையேயான கலவரம் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஏராளமானவர்கள் வீடுகள், சொந்தங்கள், உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தான் கடந்த மே 4 ஆம் தேதி இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் மணிப்பூர் விவகாரத்தால் முற்றிலுமாக முடங்கியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் வாழும் குக்கி மக்கள் இணைந்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள், குடும்பத்தினர் என 300க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறிப்பாக ’மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும், குக்கி மக்களுக்கு என தனியாக மாநிலம் பிரிக்க வேண்டும், தற்போது நடைபெற்று வரும் வன்முறை மற்றும் பாலியல் தொடர்பான வழக்குகளை சிறப்பு குழு மூலம் விசாரிக்க வேண்டும்’ என பல்வேறு கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
மோனிஷா
தகைசால் தமிழர் கீ.வீரமணி: குவியும் வாழ்த்துகள்!