வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 7 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து புயலின் நிலை குறித்து வேகம் குறித்தும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வருகிறது.
தற்போது மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று சென்னைக்குத் தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் காரைக்காலுக்கு 200 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மேலும் கடந்த 6 மணி நேரமாக 12 கி.மீ வேகத்தில் மாண்டஸ் நகர்ந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் வலுவிழந்து இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே 80 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாகக் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளை (டிசம்பர் 10) வரை தமிழகத்தில் பரவலாகக் கனமழையும் வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மொத்தம் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
புயல் கரையைக் கடப்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் படகுகள், குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் பொதுமக்கள் அவசர தேவை அல்லது புகார்களுக்கு 1913, 044-2561 9206, 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைப்பேசி எண்களில் சென்னை மக்கள் உதவி மற்றும் புகார்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், 9445477205 என்ற வாட்ஸப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோனிஷா
28 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!