வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயலின் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிசம்பர் 7) இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
புயலாக வலுப்பெற்று 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் புயலின் வேகம் குறைந்து இன்று (டிசம்பர் 8) காலை 8 மணியளவில் 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
தற்போது காலை 9 மணி நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் குறைந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மாண்டஸ் புயல் காரைக்காலுக்குக் கிழக்கு – தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும் சென்னைக்குத் தென்கிழக்கே 620 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
புயல் கரையை நெருங்கும் வேகம் குறைந்தாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை தொடங்கிவிட்டது. நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வானிலை மிகவும் அமைதியாக இருப்பதால் புயல் அடிக்குமோ என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள் மக்கள்.
அனேகமாக மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை நெருங்கும் போது காற்றின் வேகம் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
மோனிஷா